பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பி.எஸ்.எப் வீரர் பிகே  சாஹு இன்று (மே 14) காலை 10:30 மணிக்கு பஞ்சாபின் அட்டாரி எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏப்ரல் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையில் தற்செயலாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட இவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். இவரது விடுவிப்பு அமைதியான முறையில், சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்றது என பி.எஸ்.எப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்திய வீரர் பி.கே. சாஹு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். ஏப்ரல் 10 ஆம் தேதி பஞ்சாப் எல்லையில் தற்காலிக பணி நியமனத்தில் இருந்த அவர், தனது சீருடையை அணிந்தபடியே தவறுதலாக எல்லையை கடந்துள்ளார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை கைதுசெய்தனர். இதற்குப் பதிலாக, ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடந்து நுழைந்த பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவரை இந்தியா தற்போது பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமான தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த சூழலில் இருநாடுகளும் தங்களது பாதுகாப்புப் படை வீரர்களை அமைதியாக பரிமாறிக் கொண்டது.