மகாராஷ்டிராவில், மராத்தி மொழி பேசாததை மையமாகக் கொண்டு ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சாலையோர ஐஸ்கிரீம் கடையில் அந்த ஆண், “உனக்கு மராத்தி தெரியுமா?” எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண் ஹிந்தியில், “நஹி ஆதா முஜே மராத்தி” என பதிலளிக்கிறார். பின்னர் அந்த ஆண், “நீ மராத்தியில் பேசவேண்டும்” என வற்புறுத்த, பெண் தொடர்ந்து மராத்தி பேசத் தெரியாது என்கிறார்.

 

வாக்குவாதம் கடுமையாகிவிட்ட நிலையில், அந்த ஆண், “மராத்தியில் பேசமாட்டாயா? அப்படியானால் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு” என கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், “நான் என் விருப்பப்படி பேசுவேன், என் மொழி என் உரிமை” எனக் கூறி தைரியமாக பதிலளிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மொழி அடிப்படையில் ஒருவரை வற்புறுத்துவது தவறு என கண்டித்துள்ளனர். ஒருவர், “மொழியியல் சகிப்பற்ற தன்மை இவ்வாறு தொடர்ந்தால், நம்மிடம் தேவையற்ற பிளவுகள் உருவாகும்” என கருத்து தெரிவித்தார். வீடியோ எப்போது, எங்கே ஏற்பட்டது என்பது தற்போது உறுதியாகவில்லை என்றாலும், இது மொழி அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.