
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த திங்கட்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சிறுமி தனது தாயுடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 5 மணியளவில் குழந்தை காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தையை அருகில் கண்டதுடன், அவளது உடல்நிலையைப் பார்த்த தாயார், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.
இதனால் சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் வெளியிட்ட அறிக்கையில், வழக்குடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன என்றும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் கூறினார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.