காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது.

இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு முன்பே சிறிய அளவிலான துப்பாக்கி சூடு தாக்குதல்களை நடத்திய நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது.

இருப்பினும் இந்திய ராணுவம் அதனை ஆரம்பத்திலேயே வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் உள்ளிட்ட பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் போரை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் உதவி செய்வதாகவும் கூறினார்கள். இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு புத்திசாலித்தனமாகவும் சாதுரியமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இரு நாடுகளுக்கும் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் போரை நிறுத்துவதற்காக ட்ரம்ப் இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தன்னுடைய x பக்கத்தில் கூறியுள்ளார்.