உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியில் நடந்த வினோதமான குடும்பத்தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இஞ்சௌலியைச் சேர்ந்த பெண்ணை மௌலானா ஒருவர் மணந்தார். திருமணத்திற்கு பிறகு மனைவி தனது கணவரை தாடியை எடுக்கும்படி  வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தாடி வைத்த கணவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்றும், அது எரிச்சலூட்டுவதாகவும் மனைவி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மௌலானா தனது தாடியை மழிக்க மறுத்ததால், மனைவி தனது மைத்துனருடன் ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மௌலானா போலீசில் மனைவி மற்றும் அவரது சகோதரரைக் காணவில்லை என புகார் அளித்திருந்தார். பஞ்சாபின் லூதியானாவில் இருவரும் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், போலீசார் அவர்களை மீரட்டுக்குத் அழைத்து வந்தனர். புதன்கிழமை மாலை, மனைவி தனது மைத்துனருடன் வீட்டிற்கு வந்ததும், இரு குடும்பங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். பின்னர், மௌலானா, தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்ல விருப்பம் இருப்பதாக கூறினார். ஆனால் மனைவி அந்த கோரிக்கையை  நிராகரித்து, விவாகரத்து கோரினார். இதனைத் தொடர்ந்து, மௌலானா காவல் நிலையம் முன்பாகவே “முத்தலாக்” கூறி விவாகரத்து செய்தார்.

காவல் நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வின் பின்னணியில், மனைவி தனது கணவர் மீது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதேபோல், கணவர் தன்னை ஆண்மையற்றவனாக அவதூறாக குற்றம் சுமத்தியதாகவும் கூறினார். இருதரப்புகளும் இறுதியில் பரஸ்பர சமரசத்திற்கு வந்ததாக காவல்துறை தெரிவித்தது. மேலும் எந்தவொரு தரப்பும் எதிர்காலத்தில் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.