ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜா. இவர் நம்பியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நேற்று காலை பச்சம்பாளையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கவுந்தப்பாடியில் இருந்து அந்தியூர் செல்லும் டவுன் பேருந்தில் ஏறியுள்ளார்.

அந்த பேருந்து பிரம்மதேசத்தை கடந்து சென்ற போது தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு மகுடேஸ்வரி பதற்றம் அடைந்தார். இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் ரத்தினவேல் பேருந்து எங்கும் நிறுத்தாமல் நேராக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றார்.

இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தனித்தனியாக சோதனை செய்தனர். ஆனால் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வரும் வழியிலேயே மகுடேஸ்வரி தங்க நகையை தவற விட்டாரா? அல்லது நகையை திருடியவர்கள் வழியிலேயே இறங்கி சென்று விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.