பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜாவலின் எறிபவர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு “சட்டக்கோரிக்கையின்” அடிப்படையில் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அவரின் கணக்கை பார்ப்பதற்கு முயற்சி செய்த போது, “இந்தக் கணக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை” என்ற அறிவிப்பு தோன்றுகிறது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடக கணக்குகள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேவேளையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஷொயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோரின் யூடியூப் சேனல்களும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடர்ந்து கிடைக்கின்றன. அர்ஷத் நதீமின் கணக்கு மட்டும் தனித்துவமாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நீரஜ் சோப்பிராவை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற அர்ஷத் நதீம், மே 24ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள ‘NC Classic Javelin’ போட்டிக்கு நீரஜ் சார்பில் அழைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது கணக்கு தடைசெய்யப்படுவது, பாதுகாப்பு காரணங்களுக்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.