உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமா பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த 32 வயதுடைய பூஜா மண்டல் கடந்த ஆண்டு நவம்பரில் மர்மமான முறையில் காணாமல் போனதாக அவரது சகோதரி பூர்மிளா பிஸ்வாஸ், குருகிராமில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த ஹரியானா காவல்துறையினர், சித்தார்கஞ்சில் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்த முஷ்டாக் அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் முஷ்டாக், “பூஜாவை கொலை செய்து உடலை துண்டித்து கால்வாயில் வீசினேன்” என ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் தெரிய வந்ததாவது, 2022 ஆம் ஆண்டு ருத்ராபூர் பேருந்து நிலையத்தில் பூஜாவும் முஷ்டாகும் சந்தித்ததிலிருந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் அவர்கள் குருகிராமில் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் வாழ்ந்தனர்.

ஆனால் 2024 நவம்பரில் முஷ்டாக் வேறொரு பெண்ணை திருமணம் செய்த செய்தியை அறிந்த பூஜா, சித்தார்கஞ்சில் வந்து முஷ்டாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஞ்சாயத்தில் இருவரும் பேசி சமாதானம் ஆனதாக தெரிகிறது. ஆனாலும் முஷ்டாக் பூஜாவை பழிவாங்க நினைத்தார்.

இதனால் முஷ்டாக் நைசாக பேசி பூஜாவை தனது சகோதரியின் வீட்டிற்கு அழைத்து சென்று, கற்கள் நிரப்பிய பையால் பூஜாவின் தலையில் ஓங்கி அடித்து கொன்றார். பிறகு காளி புலியா சுரங்கப்பாதை அருகே பூஜாவின் கழுத்தை கத்தியால் அறுத்து, உடலை துணியில் சுற்றி வீசி சென்றுள்ளார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தேடுதல் நடத்தியதில் பூஜாவின் தலையற்ற உடல் மீட்கப்பட்டது. தலையை தேடும் பணி தொடர்கிறது. இது குறித்து உதம் சிங் நகர் எஸ்எஸ்பி மணிகாந்த் மிஸ்ரா தெரிவித்ததாவது, “இது திட்டமிட்ட கொலை. குற்றவாளிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.