பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் கடும் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து பாகிஸ்தான் குடிமக்களுக்கும் இந்தியாவில் தங்கும் விசாக்களை ரத்து செய்து, உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டது. இதனையடுத்து, அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் மக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் சிலர் மீதான நடவடிக்கையில் மத்திய அரசு இரக்கம் காட்டியுள்ளது. அந்தவகையில், ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பாகிஸ்தான் நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் காவல் ஆணையரிடம் ஒரு பாகிஸ்தான் நபர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன், தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க நகரத்திற்கு வந்திருப்பதாக கடிதம் எழுதியிருந்தார். மனைவி இந்திய குடிமக்களாகவும் அந்தக் குடும்பத்தில் பிறந்த இளைய மகனும் இந்திய குடிமகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கணவரும் மூத்த மகனும் பாகிஸ்தான் குடிமக்கள். விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்திருந்தாலும், அது நடவடிக்கையில் இல்லை என்பதையும் தெரிவித்தார். இதனையடுத்து, விசாகப்பட்டினம் போலீஸ் ஆணையர் சங்கபத்ர பாக்சி, ஹைதராபாத்தில் உள்ள FRRO அலுவலர்களை அணுகி, மகனின் சிகிச்சை முடியும் வரை அந்த நபரின் விசாவை தற்காலிகமாக நீட்டிக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த சம்பவம் நடக்கும் வேளையில், ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள பாகிஸ்தானிய குடிமக்களை அடையாளம் காணும் பணியை மாநில போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாநிலத்தின் 13 மாவட்டங்களில் மொத்தம் 21 பாகிஸ்தான் குடிமக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில் ஒருவர் மீது காட்டப்பட்ட தயை, இந்திய அரசின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையில் ஏற்படுத்திய அமைதி வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை நிலைநாட்டும் முன்மாதிரியாகும்.