
ராஜஸ்தான் மாநில ஜுன்ஜுனு மாவட்டத்தில் DIG-க்கு கீழ் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், 28 ஆண்டுகள் காவல் துறையில் சிரமப்பட்டு பணியாற்றியதை ஒட்டி ஓய்வு பெற்றார். அவரின் சேவையை கௌரவிக்க, ஜுன்ஜுனு காவல் கண்காணிப்பாளரும் டிஐஜி அதிகாரியுமான ஐபிஎஸ் சரத் சவுத்ரி ஒரு மகத்தான மனிதநேய செயலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஓய்வுப் பெறும் ஓம் பிரகாஷுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கியதுடன், அவரை அரசு வாகனத்தில் அவரது இல்லத்திற்குத் தானாகவே ஓட்டிச் சென்றார். இந்த நிகழ்வு, உயர் அதிகாரி ஒருவர் தனது கீழ் பணியாற்றும் ஊழியருக்கு காட்டிய அன்பும், மரியாதையும் காவல் துறையில் மிகுந்த புகழாக பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி, டிஐஜி சவுத்ரி, ஓம் பிரகாஷுக்கு ஓய்வு வாழ்வில் பயண வசதி பெறும் வகையில் தனிப்பட்ட முறையில் ஒரு ஸ்கூட்டரை பரிசளிக்க இருப்பதாக உறுதியளித்தார். “ஒவ்வொரு ஊழியரும் துறையின் முதுகெலும்பு. அவர்கள் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டியது தலைமைக்குரிய பொறுப்பு,” என்று அவர் தெரிவித்தார்.
சாதாரணமாக அரசு அமைப்புகளில், குறிப்பாக காவல் துறையில், உயர் அதிகாரிகளும் கீழ் நிலை ஊழியர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி காணப்படும். ஆனால் இந்த சம்பவம், தலைமைத்துவம் என்பது பதவியல்ல, மனிதநேயம், கருணை, பணிவுடன் கூடிய நடத்தை என்றும் உணர்த்துகிறது.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுகளை பெற்று வருகிறது. “இது தலைமைத்துவத்தின் உண்மையான உருவம்”, “ஒரு நல்ல தலைவர் அமைப்பையும் மாற்ற வைக்கும்” என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிஐஜி சரத் சவுத்ரியின் செயல் காவல் துறையின் மற்ற உறுப்பினர்களிடமும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓம் பிரகாஷ் உணர்ச்சிவசப்பட்டு, “இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்” எனக் கூறினார். இந்த நேரத்தில் அவர் பெற்ற மரியாதை, எல்லா ஊழியர்களுக்கும் தங்களின் பங்களிப்பு மதிக்கப்படுவதை உணர்த்தும் வகையில் விளங்குகிறது.