துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் “Royal Maison” தற்போது அறிவித்துள்ள வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பதவிக்கு மாதம் AED 30,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம்) சம்பளமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

இது போலி இல்லை, நிஜமான வேலைவாய்ப்புதான் என்றும், சம்பள விவரத்தில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை என்றும் நிறுவனமே உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த வேலை துபாய் மற்றும் அபுதாபியில் வசிக்கும் இரண்டு VVIP வணிக குடும்பங்களுக்கு ஆகும். ஆனால் அவர்கள் பெயர்கள் பொதுவாக வெளியிடப்படவில்லை.

இந்த பணிக்கான பொறுப்புகளில் வீட்டுப் பணியாளர்களை மேற்பார்வையிடுதல், வீட்டு பராமரிப்பு பணிகளை ஒழுங்குபடுத்துதல், செலவுத்திட்டம் மற்றும் நிதி நிர்வாகம், குடும்ப நிகழ்வுகளை திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கும்.

 

உயர்தர வீட்டு நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பல பணி அழுத்தங்களுக்கு இடையிலும் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று Royal Maison நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் சிறந்த ஒருங்கிணைப்பு திறன், நுணுக்கமான கவனிப்பு மற்றும் நவீன வாழ்க்கைமுறைக்கு ஏற்ப பணியாற்றக்கூடிய திறன் வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு இணையத்தில் வைரலானதையடுத்து, பலரும் தங்கள் தற்போதைய வேலைவாய்ப்புகளை விட்டுவிட்டு இந்த வேலையை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். “நான் என் பட்டப்படிப்பு மற்றும் அனுபவங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த வேலையை செய்ய தயாராக இருக்கிறேன்” என்ற ஒரு நபரின் கருத்து, சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு பணியாளர்களுக்கு இவ்வளவு உயர்ந்த சம்பளங்கள் வழங்கப்படுவது அபூர்வம் என்பதால், இந்த வேலைவாய்ப்பு உயர்தர வாழ்க்கைத் தரம், பணியாளர் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிய புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.