கர்நாடக மாநிலத்தில் ஹூபள்ளி – ஹவேரி மாக்சு அருகே ஜாவேரி பகுதியில், மாநில போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி நமாஸ் தொழுகையில் ஈடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் இருந்தும், அவர் தொழுகை செய்த காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. வீடியோவில், ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தி, ஒரு இருக்கையில் அமர்ந்து தொழுகை செய்யும் காட்சியும், பயணிகள் நிலைமை தெரியாமல் வீடியோ எடுக்கும் காட்சியும் தெளிவாக காணப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக சில பயணிகள் புகார் அளித்ததை அடுத்து, கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி, “அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது. இது பொதுப் பணிக்கு எதிரான செயலாகும். பயணிகளுடன் கூடிய பேருந்தை நடுவழியில் நிறுத்தி தொழுகை செய்வது முறையல்ல” எனக் கண்டித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.