
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மான்பாடா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இதன் 11-வது மாடியில் சமிக்ஷா என்ற 20 வயது இளம்பெண் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக இளம்பெண்ணின் மாமா கண்டித்ததோடு செல்போனை பிடுங்கி விட்டு தூங்க செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இது சமிக்ஷாவுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியதால் அவர் பால்கனிக்கு சென்று 11-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சமிக்ஷா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக அவரது மாமா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.