
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார். அவருக்கு மின்சார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஒரு வருடத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்ககூடும் என்பதால் உடனடியாக அவருக்கு ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதே நேரத்தில் அமைச்சர் பதவி இல்லையெனில் ஜாமீன் இரண்டில் ஒன்றுதான் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்ததால் செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்நிலையில் தற்போது கோவை மாநகரில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை படையப்பா ரஜினி போன்று சித்தரித்து வைத்துள்ளனர். அதோடு நான் யானை அல்ல. குதிரை டக்குனு எழுவேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அவருடைய ஆதரவாளர்கள் அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று நோக்கத்தில் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது.