
அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியாக இருக்கும் வடக்கு சென்டினல் தீவு, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். இத்தீவுக்கு அனுமதி இல்லாமல் நுழைந்ததாக அமெரிக்க யூடியூபர் பாலிகோ(24) என்ற இளைஞர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூர்வக்குடி மக்கள் வசிக்கும் இந்த தீவுக்குள் அத்துமீறி நுழைந்ததால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.
சென்டினல் மக்கள் வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல், தனிமையில் வாழும் பழங்குடி சமுதாயமாகும். அவர்கள் வெளியாட்கள் மீது கடும் எதிர்ப்பும், வன்முறையும் கொண்டிருப்பதால், இந்திய அரசு உள்பட யாரும் அத்தீவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
அதனால், பாலிகோவின் செயல் கடும் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அவர் அந்த தீவில் சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருந்தாலும் சென்டினல் மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படாமல் உயிருடன் மீட்கப்பட்டார்.
பாலிகோவுக்கு முன்பாக, 2018ஆம் ஆண்டு, ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது அமெரிக்க கிறிஸ்தவ மதபோதகர், சென்டினல் தீவுக்குள் நுழைந்து அங்குள்ள பூர்வக்குடி மக்களால் கொல்லப்பட்ட சம்பவமும் ஏற்பட்டது.
சாவ், மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு சிறிய படகில் தீவுக்குச் சென்றதும், அவர் தீவுக்கு நுழைந்ததும், பூர்வக்குடி மக்கள் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி அவரை தாக்கி கொன்றனர்.
இவ்வாறு வெளிப்பட்ட சம்பவங்கள், சென்டினல் மக்களின் தனித்துவத்தை, அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் தேவையை வலியுறுத்துகின்றன. 2006ஆம் ஆண்டிலும், இரண்டு இந்திய மீனவர்கள் அத்தீவுக்கு அருகே தங்கியிருந்தபோது தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர்களின் சடலங்களை மீட்க சென்ற ஹெலிகொப்டருக்கே சென்டினல் மக்கள் எதிர்ப்பு காட்டியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒருவரால் அத்துமீறல் செய்யப்பட்டது, அதன் விளைவாக இந்திய அதிகாரிகள் கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.