பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் அபுல் கைர் கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக குடும்பத்தினருடன் வந்த 22 வயது BCA மாணவியை, அங்குள்ள ஜஷன் கில் என்ற பாதிரியார் பலமுறை கற்பழித்ததாக அவரது தந்தை ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“எங்கள் குடும்பம் அந்த தேவாலயத்திற்கு போவதுண்டு. ஜஷன் கில் என் மகளைக் தவறாக வழிநடத்தி பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தினார். என் மகள் கர்ப்பமாகி, பின்னர் கொக்கர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நர்ச் மூலம் கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்பட்டார்,” என அவர் கூறினார்.

கருக்கலைப்பின் போது ஏற்பட்ட மருத்துவ சேதம் காரணமாக மாணவிக்கு தொற்று ஏற்பட்டதாகவும், வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அல்ட்ராசவுண்ட் மூலம் கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் மாணவியின் தந்தை கூறினார்.

பின்னர் மாணவி அமிர்தசருக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தந்தை தெரிவித்தார்.

இந்த சம்பவம் 2023ஆம் ஆண்டு நடந்தது என்றாலும், ஜஷன் கில் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், போலீசாரிடம் லஞ்சம் கொடுத்ததால் அவர் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு வருகிறார் என்றும் மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

பல முறை உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததால் தான் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“என் மகளுக்காக நீதியை நாடுகிறேன், பஞ்சாப் போலீசார் எதையும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளேன்” என்று அவர் கூறினார்.

இதற்கு முன், பஞ்சாப் மோகாலி நீதிமன்றம், 2018ல் நடந்த பாலியல் வழக்கில் பாஜிந்தர் சிங் என்ற மற்றொரு பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.