மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரின் மகன் பைக் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரின் மகன் ஆதித்யராஜ் மகாராஷ்டிராவில் உள்ள புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சதாரா- கோலாப்பூர் பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பைக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டண்ட் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

இதனை அப்பகுதியில் சென்ற மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில், காவல்துறையினர் மற்றும் வாகன அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளனர். இதுவே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அவருடைய வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டு கூடுதலாக அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

அமைச்சரின் மகன் ஓட்டிய விலை உயர்ந்த வெளிநாட்டு பைக்கில் நம்பர் பிளேட் கூட இல்லை. ஆனால் இதனை எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.