
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற இரண்டு பேர் லிப்ட் கொடுப்பதாக கூறி சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று ஒரு பாலத்திற்கு கீழே இழுத்துச் சென்றனர். அவர்கள் அந்த சிறுமியின் மார்பகத்தை பிடித்ததோடு உடையில் இருந்த நாடாவை கழற்றி உள்ளனர். இதனை அந்த பகுதியில் இருந்த மக்கள் தடுத்து நிறுத்தியதோடு இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த குற்றத்தில் ஈடுபட்ட பவன் மற்றும் ஆகாஷ் என்ற இரு வாலிபர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா என்பவர் விசாரித்தார். இந்த விசாரணையின் போது சிறுமியின் டிரஸ்ஸை கழட்டியது பாலத்தின் கீழ் இழுத்து சென்றது மார்பகத்தை தொட்டது போன்றவைகள் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் நீதிபதி பாலியல் குற்றமாகாது என்று கூறிவிட்டார். அதாவது இந்த குற்றச்சாட்டுகள் மூலம் அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டு இருந்தனர் என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார். அவர்களுடைய வேறு செயல்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் என்பதை நிரூபிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உத்திரப்பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்புமாறு கூறி உத்தரவிட்டுள்ளது