இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தலைமையில் செயல்படும் செவ்லான் குளிர்பான நிறுவனம், ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அலுமினியம் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த நில ஒதுக்கீடு விவகாரம் தற்போது சட்டசபையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இது பற்றி  கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து விவசாயத்துறை மந்திரி ஜாவித் அகமது தார் பேசும்போது, இது வருவாய் துறையைச் சேர்ந்த விவகாரம் என்பதால் தங்கள் அமைச்சகத்திற்குத் தொடர்பு இல்லை, ஆனால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, முத்தையா முரளிதரன் தனது தொழில்துறையை இந்தியாவில் விரிவுபடுத்தும் முயற்சியாக கர்நாடக மாநிலத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டார். கடந்த ஆண்டு, கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 46 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது காஷ்மீரில் நில ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, மாநில அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.