தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு என்றென்றும் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்று கூறிவிட்டது. ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு மும்மொழி கல்விக் கொள்கைப் பெயரில் முயற்சி செய்வதாக திமுகவினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் பாஜகவினர் இதில் ஹிந்தி திணிப்பு கிடையாது என்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றொரு மொழியையும் கற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்பிக்கப்படுவதாகவும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் இரு மொழிக் கொள்கை இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில் தற்போது பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால் 99 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக கூறியுள்ளனர். அதன் பிறகு முதல் மொழி தமிழ் மொழி கட்டாயம். இரண்டாம் மொழி ஆங்கில வழிக் கல்வி. மூன்றாம் மொழி மாணவர்களின் விருப்பமொழி. திமுக மந்திரி மகனுக்கு கிடைக்கும் கல்வி ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்க கூடாதா. மேலும் சிபிஎஸ்இ பள்ளியில் கிடைக்கும் கல்வி அரசு பள்ளி மாணவனுக்கும் கிடைக்க கூடாதா போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.