கேரள மாநிலம் கோட்டயத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்‌ ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பண மோசடி தொடர்பாக புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த வழக்கை காந்திநகர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பெண் தன்னுடைய புகாரில் கூடுதல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பிஜூ (52) என்பவர் பணியில் இருந்தார். இவர் அந்த பெண்ணிடம் புகாரை விசாரிக்க வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு மது பாட்டில் போன்றவற்றை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

முதலில் அதை கேட்டு பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் வேறு வழியின்றி டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்தார். இதைத்தொடர்ந்து பிஜூ தன்னுடன் தனிமையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பிஜுவிடம் பெண் கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர். அதாவது ஹோட்டலுக்கு அந்த பெண்ணை பிஜு அழைத்திருந்த நிலையில் அந்த பெண் வருவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.