உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சிவ் பரிவார் பகுதியில் வசித்து வருபவர் சந்திப் புதோலியா. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சந்திப் மனைவி(29) அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திப்பின் மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு சந்திப் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பெண்ணை கொடுமையான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ததாக பெண்ணின் தந்தை சஞ்சீவ் திரிபாரதி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில், திருமணத்தின் போது தனது பெண்ணிற்கு ரூபாய் 20 லட்சம் பணமாகவும், பல நகைகள் ஆகவும் பரிசு வழங்கியுள்ளேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு சந்திப் மற்றும் அவரது குடும்பத்தினர் மேலும் ஒரு கார் தர வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால் தனது மகளுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த துன்பத்தை கொடுத்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் தந்தை சஞ்சீவ் திரி பாரதி கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின் பெண் குழந்தை பிறந்ததாகவும் ஆண் குழந்தை இல்லை என மாமியாரும், மாமியார் வீட்டு உறவினர்களும் தனது பெண்ணை தொடர்ந்து அவமதித்து வந்ததாகவும் குழந்தை பெண் குழந்தை என தெரிந்ததும் மருத்துவமனையிலேயே தன் பெண்ணை விட்டு விட்டு சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

பின்னர் காவல் துறையினர் இந்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து சந்திப் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் சந்திப்பின் குழந்தையான நான்கு வயது சிறுமி அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில்”அப்பா அம்மாவை அடித்தார். அவர் அம்மாவை ஒரு கல்லால் தலையில் அடித்து விட்டு ஒரு மூட்டையில் கட்டி தூக்கி எறிந்து விட்டார். இதற்கு முன் அவர் அம்மாவை அடிக்கும் போது நீ அம்மாவை அடிக்க கூடாது இல்லை எனில் நான் உன் கைகளை உடைத்து விடுவேன் என கூறினேன் அதற்கு என்னையும் அடித்தார். என்னையும் கொலை செய்து விடுவார்” என சிறுமி கண்ணீருடன் கதறி உள்ளார். மேலும் இச்சம்பவத்தில் கொலை குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மகளின் முன்பே தாயை, தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.