அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை. அவருடைய படங்கள் இல்லாததால் தான் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நான் தெளிந்த மனதுடன் இருக்கிறேன். அதிமுக கட்சி எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான் என்று கூறினார்.

ஜெயலலிதா ஒரு விரலை நீட்டும் போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு  நான் செயல்பட்டவன். அப்படி இருக்கும்போது அவர் எதற்காக என்னை கழட்டி விட்டார் என்பதை சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். எனக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதிலும் அதையெல்லாம் மறுத்து கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது என்று கூறினார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு செங்கோட்டையன் தான் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

அதாவது செங்கோட்டையன் தான் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வரிசையில் செங்கோட்டையனும் அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர். கட்சியில் மூத்தவரான அவர் முதலமைச்சர் ஆவார் என்று கூறப்பட்ட நிலையில் இபிஎஸ் முதல்வர் சீட்டில் அமர்ந்தார். மேலும் இந்த நிலையில் ஜெயலலிதா தன்னை கழட்டிவிட்டார் என்றும் அதற்கான காரணத்தை தன்னால் வெளியே சொல்ல முடியவில்லை என்றும் தற்போது செங்கோட்டையன் ஆதங்கத்துடன் கூறியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.