அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி செய்து 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு மந்தமாக நடந்து வருவதால் வேறொரு துறைக்கு வழக்கின் விசாரணையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர்‌ வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று கோர்ட் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை  சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.