புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் அரசு மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது, அதிமுக போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அண்ணா பல்கலைக்கழக வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்ற நீதிமன்றமே கூறிவிட்டது. FIR கசிந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. திமுக ஆட்சியில் தான் பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி பத்திரமாக வீடு திரும்புகின்ற பொழுதுதான் உண்மையான சுதந்திரம் என கூறியிருந்தார்.

அது இந்தியாவிலேயே கடைபிடிக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறுகிறார். அவர் மற்ற மாநிலத்திற்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு வரட்டும். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக கூறுகிறோம். தயவு செய்து வெளியே சென்று பாருங்கள். எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு நினைப்பதை போல எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கிற பரிதாபகரமான நிலையில் அண்ணாமலை இருக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.