
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மற்றொருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மாணவியை மிரட்டியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அந்த மற்றொருவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகர் மாணவியை மிரட்டிய போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபரிடம் மாணவியை மிரட்டி கொண்டிருக்கிறேன் சார் என ஞானசேகர் கூறியதாக தெரிகிறது.
அதாவது அந்த சாரிடம் அவர் பேசிய போது அவரிடமும் தனியாக இருக்க வேண்டும் என்று மாணவியிடம் கூறியதாகவும் அந்த அழைப்பை துண்டித்த பிறகுதான் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவிக்குரியதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது அவர் இந்த வழக்கில் சார் என்று யாரும் கிடையாது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசியதாக கூறும் தகவல் முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.
அதோடு கைது செய்யப்பட்டவர் அந்த கட்சி இந்த கட்சி என்ற பாகுபாடு எல்லாம் காவல்துறைக்கு கிடையாது எனவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். அதாவது ஞானசேகரன் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததால் அவர் சாரிடம் பேசியதாக கூறும் தகவல் பொய்யானது என்று கூறியுள்ளார். இதனையடுத்து எஃப் ஐ ஆர் லீக் ஆனது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அது பற்றி அவர் கூறும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப் ஐ ஆர் லீக் ஆகி இருக்கலாம் என்றார். பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வது தான் எஃப் ஐ ஆர் என்றும் விளக்கம் கொடுத்தார். மேலும் எஃப் ஐ ஆர் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று உறுதி கொடுத்துள்ளார்.