வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது பெங்கல் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த புயல் சின்னம் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நீடிக்கும் நிலையில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே வருகிற 30-ஆம் தேதி கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணம் பகுதியில் கடல் இரண்டாவது நாளாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அந்தப் பகுதியில் பலத்த தரைக்காற்றும் வீசுகிறது.