தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக விஜயும் இருப்பார்கள் என்றும் செய்திகள் பலவாறு வெளி வந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்காது அது பற்றிய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அறிக்கை வெளியிட்டார். இது தொடர்பாக தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அவர் பாஜக அல்லாத திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் கண்டிப்பாக அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும். 2026 ஆம் ‌ ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். அதை ஏற்றுக் கொண்டு வரும் கட்சிகள் கூட்டணியில் சேர்க்கப்படும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் நாங்கள் கூட்டணி தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்துடனும் விஜயுடனும் இதுவரை பேசவில்லை என்று கூறினார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது தமிழக வெற்றி கழகத்தின் நோக்கம் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் நேற்று விஜய் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜெயக்குமார் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அதனை ஏற்றுக் கொண்டு வரும் கட்சிகள் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.