சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷின் தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் டாக்டரை கத்தியால் குத்தியதாக கூறியிருந்தார். இது குறித்து விக்னேஷின் தாய் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு மூன்று பசங்க இருக்கிறார்கள். போன ஆண்டு நவம்பரில் எனக்கு காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு எனக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. மூன்று லட்ச ரூபாய் செலவாகும் எனக் கூறியதால் வீட்டிற்கு வந்து விட்டோம்.

இதனை அடுத்து அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்கள். ஆனால் அங்கும் 95 ரூபாய் செலவு செய்தேன். டிசம்பர் 30ஆம் தேதி ஊசி போட்டார்கள். அடுத்த ஊசி போட மாட்டேன் எனக் கூறி ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டிற்கு வந்து விட்டேன். நந்தினி என்ற செவிலியர் சொன்னதை கேட்டு கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜியை பார்த்தேன். அவர் எனக்கு இரண்டாவது ஸ்டேஜ் என்று சொன்னாரு. அப்புறம் ஐந்தாவது ஸ்டேஜ் என்று சொல்றாங்க. கீமோ சிகிச்சையின் போது உடம்பு பிரச்சினை குறித்து சொன்னால் அசிங்கம் அசிங்கமா திட்டுவார்.

கேன்சர் என்று சொல்லாமல் காய்ச்சல் என்று சொல்லி காலை 10 மணி முதல் 5.30 மணி வரை உட்கார வைத்து அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் தலைமை டாக்டர் சொன்னதால் எனக்கு சிகிச்சை அளித்தார்கள். 18 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். அதன்பிறகு விருகம்பாக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் இரண்டு மாதம் சிகிச்சை பெற்றேன். சபிதா மருத்துவமனைக்கு சென்ற போது அவர்கள் என்னை காப்பாற்ற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஐந்து கீமோ சிகிச்சை வரை என்னுடைய நுரையீரல் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் பழுதானது.

கடந்த பத்து நாட்களாக என் மகன் என்னை பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டான். எனக்கு உடை எல்லாம் அவன் தான் மாற்றி விடுவான். நான் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் கூறியதால் மனவேதனையில் இருந்திருப்பான். நான் படும் கஷ்டத்தை பார்த்து இப்படி செய்து விட்டானோ? என்னுடைய மகன் நேரடியாக கத்தியால் குத்தி விட்டான். பொய் இல்லாமல் உண்மையை சொல்கிறேன். மூன்று பேர் வந்து வீட்டை சோதனை பண்ணாங்க என்னுடைய பைல் எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க.

ஆறாவது மாதம் நுரையீரல் பழுதான ஸ்கேன் எல்லாம் அதுல தான் இருக்கு. அதை எடுத்துட்டு போயிட்டாங்க. நான் கிண்டி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றேன். அந்த பைல்ல அது எல்லாம் இல்லனா நான் சும்மா விட மாட்டேன். என் மகனுக்கு என் மகன் செய்தது சரி என்று சொல்லவில்லை. ஆனால் டாக்டர் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டுவார். நோட்டை தூக்கி வீசி அடித்தார். நான் டாக்டரா நீ டாக்டரா என்று அடிக்கடி கேட்பார். எனது இரண்டாவது மகன் ஆளை கூப்பிட்டு போலாம் என்று சொன்னான். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கே கடும் கோபம் தான் என பிரேமா கூறியுள்ளார்.