அரசுப் பேருந்தில், பயணியிடம் திருடியதாக டிரைவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கலில் இருந்து அரசு பேருந்து நிஜாமாபாத் சென்று கொண்டிருந்தது.  இந்த பயணத்தின் போது, ஒரு பெண் பயணி தனது கைப்பையை ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைத்துள்ளார்.

பையில் இருந்த பெண்ணின் தங்க நகைகளை பார்த்த டிரைவர், சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். வாகனம் ஓட்டும் போது, அவரது பையைத் திறந்து நகைகளைத் திருடிச் சென்றார். ஆனால், ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த உஷாரான பயணி, இதைப் பார்த்துவிட்டு, அந்தச் செயலை அமைதியாக தனது செல்போனில் பதிவு செய்தார். வீடியோவை ஆதாரமாகப் பயன்படுத்தி, மற்ற பயணிகள் தங்கள் இலக்கை அடைந்ததும் டிரைவரை கண்டித்தனர். உடனே, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, டிரைவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்தனர்.  முதலில், போலீசார் விசாரித்தபோது, பையில் இருந்து நகைகள் வெறுமனே கீழே விழுந்ததாக டிரைவர் கூறினார். இருப்பினும், பலமுறை விசாரணைக்கு பிறகு, அவர் அதை தானே எடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.