
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள திகுவகாலிகுட்டாவை சேர்ந்த 27 வயதான பத்மநாபரெட்டி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்து மனமுடைந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். பத்மநாப ரெட்டி பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பத்மநாப ரெட்டி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது சடலத்தை மீட்டபோது, அவரது பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்தேன். தயவு செய்து யாரும் இதில் ஈடுபட வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது,” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “பந்தயம் கட்டும் மாஃபியாவின் தகவல்களை பெற்றாலும், போலீசாரால் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் எழுதியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.