ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலைப்பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் இரவில் புகுந்த மர்ம நபர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்பாறை கிராமத்தில் இந்தச் சோகம் அரங்கேறியுள்ளது. அங்கே உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில்,  ஒரு மகனும் மகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

வழக்கம் போல் நேற்று இரவில் வீட்டின் கதவைச் சாத்திவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். அப்போது நுழைந்த கொடூர மர்ம நபர் ஒருவன், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் வாயைப் பொத்தி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தன் வயதைக் கூடப் பாராமல் அந்தப் பாவி செய்த இந்த வெறிச்செயலுக்குப் பிறகு, அவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். மறுநாள் காலையில் மூதாட்டியின் உறவினர்கள் வழக்கம் போல வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நிலைமையைக் கண்டு உறைந்து போய்விட்டனர். மூதாட்டி ஆடைகள் கலைந்த நிலையிலும், படுக்கையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடியும் கிடந்துள்ளார்.

உடனடியாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளார்.