தாய்லாந்து- மியான்மர் எல்லையில் தொடர்ந்து இணைய வழி மோசடி அதிகரித்துக் கொண்டே வருவதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வேலை என நம்பி வரும் பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அந்நாட்டின் அரசு டிஜிட்டல் அரெஸ்ட் இணைய மோசடி மூலம் உலகம் முழுவதும் பல்வேறு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருபவர்களை கைது செய்து அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.

அதன்படி தாய்லாந்து மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடியில் சுமார் 7000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்லிங் ஷினவத்ரா இந்த மாதம் பேஜிங்கிற்கு சென்று சீனப்பிரதமர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசி உள்ளார். இந்த மோசடி கும்பலை கைது செய்ய தாய்லாந்து அரசு மியான்மர், கம்போடியா, லாவோஸில் உள்ள வேலை மையங்களில் மின்சாரம், இணைய வசதி, எரிவாயு வினியோகம் முதலியவற்றை துண்டித்துள்ளனர்.

அதன் பின்னர் மோசடி பணிகளில் ஈடுபட்டு வந்த 7000 பேரை மீட்டுள்ளனர். இந்த மோசடி கும்பல்கள் இணையம் மூலம் காதலித்து பணம் பறிப்பது, சூதாட்டம், டிஜிட்டல் அரஸ்ட் என பல வழிகளில் உலகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலிடம் சிக்கி பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு அந்தந்த நாட்டின் அதிகாரிகளுடன் ஆலோசனை அடுத்த வாரத்தில் நடைபெறும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பலில் 7000 பேரில் சீனாவை சேர்ந்தவர்கள் 50 சதவிகிதம் எனவும் மீதமுள்ள 50% மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 2000 பேர் ஆன்லைன் மோசடி வேலையில் பணிபுரிவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து- மியான்மர் எல்லையில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.