திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் வசித்து வந்த சயன்(40) என்ற நபர், தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று, கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.

கடனை தவணையாக செலுத்தியிருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தவணையை செலுத்த முடியாமல் போனதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து, நிதி நிறுவனத்தினர் சயனின் வீடு உள்ளிட்ட ஏழு வீடுகளுக்கும் சீல் வைத்து, மின் இணைப்பை துண்டித்தனர்.

இந்த விவகாரத்தில் வாடகையாளர்கள் மற்றும் சயன் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பல்லடம் போலீசார் சயனையும் அவரது மனைவி கீதாவையும் விசாரணைக்காக அழைத்து வந்தனர். அதில், சயன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்துள்ளார் என்பதும் , திருமணம் செய்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, இந்திய குடியுரிமையை பெற முயன்றும் அதில் வெற்றி பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சயன், திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவரை திருமணம் செய்த பின்னர், தனது அடையாளங்களை மறைத்து இந்தியாவின் பல பகுதிகளில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சட்டவிரோத குடியேற்றவாளராக இருந்த சயனை போலீசார் கைது செய்து, சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.