
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டகுழந்தையை, டெல்லி போலீசார் விரைந்து நடத்திய சோதனையின் மூலம், 4 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்த குழந்தையை அன்றைய நாளில் பிற்பகலில் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சப்தர்ஜங் என்க்ளேவ் போலீசாரின் தீவிர நடவடிக்கையால், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 27 வயதான பூஜா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அவரது கணவர், தற்போது சாணக்யபுரி யஷ்வந்த் பிளேஸில் வசித்து வருகிறார்கள். சப்தர்ஜங் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததையடுத்து, தாயார் வார்டு நம்பர் 5-க்கு மாற்றப்பட்டார். அன்றைய பிற்பகலில் சுமார் 3.15 மணியளவில் குழந்தை காணவில்லை எனத் தெரிவித்தனர்.
போலீசார் மருத்துவமனை மற்றும் மெட்ரோ நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகம் ஓரளவு மூடிய ஒரு பெண், மற்ற நோயாளிகளுடன் பேசியபடி குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் இருந்தது. அந்த பெண் பிஞ்சு குழந்தையை எடுத்து ஏஐஐஎம்எஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து மெட்ரோவில் பல முறை ரெயில்களை மாறி, மால்வியா நகர் பகுதியில் உள்ள குலக் வாலி காலனியில் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.
பூஜாவிடம் விசாரணை நடத்தியபோது, திருமணமாகி கடந்த 7 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால் பூஜா தன் கணவரிடம் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியுள்ளார். தற்போது குழந்தை வேண்டும் என்பதால் பிறந்த குழந்தையை அவர் கடத்தி விட்டு சென்றதாக விசாரணையில் கூறியுள்ளார். மேலும் பூஜாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.