
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சாகிபாபாத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனான். அந்த சிறுவனின் பெயர் ராஜூ. அந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ராஜு காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் ராஜுவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் காவல்துறையினராலும் குடும்பத்தினராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கு ராஜுவை நாள் முழுவதும் வேலை வாங்கிய நிலையில் பின்னர் கட்டி போட்டு வைத்துள்ளனர்.
சாப்பிடுவதற்கு ஒரு நாளில் ஒரு ரொட்டி மட்டுமே கொடுத்துள்ளனர். அங்கிருந்து தப்பி செல்ல ராஜு எவ்வளவோ முயன்ற நிலையிலும் அவரால் முடியவில்லை. ஆனால் தற்போது அவருக்கு 37 வயது ஆகும் நிலையில் எப்படியோ அங்கிருந்து தப்பித்து டெல்லி காவல்துறையினரிடம் சென்று உதவி கேட்டார். அவர்கள் சமூக வலைதளத்தில் உதவியுடன் ராஜூ குடும்பத்தினரை கண்டுபிடித்தனர். மேலும் தற்போது 30 வருடங்களுக்குப் பிறகு கடத்தப்பட்ட நபர் மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.