சாலை விதி மீறலுக்கான அபராதத்தொகைக்கு 50% தள்ளுபடி சலுகையை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், அவை நடக்க முக்கியமான காரணமாக விளங்கும் சாலை விதி மீறல்களை குறைப்பதற்காகவும் உச்சபட்ச அபராதம் என்பது தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலைமை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாலை விதி மீறுபவர்களுக்கு அதீத கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அபராததிற்கு பயந்தே  ஏராளமானோர் முறையாக சாலை விதிகளை தற்போது கடைபிடித்து வருவதாகவும், சாலை விதிமீறல்கள்  சற்று குறைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.

இந்நிலையில் இவ்வகையான விதிகளின் மீதான மக்களின் அதிருப்தியை குறைப்பதற்காக கர்நாடக அரசு புதிய சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி பதினொன்றாம் தேதிக்கு முன் அபராத செல்லான்கள்  பெற்றவர்களுக்கு மட்டும்  அபராத தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை இந்த அறிவிப்பு நிலுவையில் இருக்கும் எனவும், அதற்குள் அபராதத்தொகையை செலுத்தி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தற்போது கர்நாடகா மக்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.