
சாம்பியா நாட்டில் உள்ள சீனாவிற்கு சொந்தமான வெண்கலம் தோண்டும் நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட அமிலக் கசிவு பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பொறியியல் நிறுவனத்தின் ஆய்வின்படி, அங்கு இருந்த கழிவுகளை தக்கவைக்க வடிவமைக்கப்பட்ட தடுப்பு அணை இடிந்துவிழுந்தது. இதன் விளைவாக, சுமார் 50 மில்லியன் லிட்டர் ஆபத்தான அமிலக் கழிவுகள், கடும் அமிலத்தன்மை கொண்ட பொருட்கள், கனிம உலோகங்கள் கலந்த நீர் ஆகியவை சாம்பியாவின் முக்கிய நீர்வழியான கஃப்யூ ஆற்றில் கலந்துவிட்டன.
1,500 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீராகவும் விவசாயத்திற்கு பயன்படும் நீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது விஷப்பொருள் கசிவு ஆற்றின் கீழ் செல்லும் பகுதிகளில் 60 மைல் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது. இது நீண்ட கால புவிசார் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த பேரழிவை கையாளுவதற்காக சாம்பியாவின் அரசு அதிகாரிகள், விமானப்படையை கொண்டு ஆற்றில் நுரை கலந்த சுண்ணாம்பு வீசி, அமிலத்தன்மையை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அரசு பேச்சாளர் கொர்னீலியஸ் மீட்வா, இந்த சம்பவம் மிகவும் கடுமையானதாகும்.
பாதிக்கப்பட்ட சூழலினை சீன நிறுவனமான Sino-Metals Leach Zambia சரி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சீன நிறுவனத்தின் தலைவர் சாங் பெய்வென், அரசியல் அதிகாரிகளை சந்தித்து தமது வருத்தத்தைக் தெரிவித்துள்ளார். மேலும், அமிலக் கசிவால் ஏற்பட்ட சேதங்களை விரைவாக சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால், சீனாவிற்கு சொந்தமான தொழில்துறைகள் சாம்பியாவில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில் கவனக்குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, இந்த விபத்துக்குப் பிறகு, இன்னொரு வெண்கலச் சுரங்கத்திலிருந்தும் சிறிய அளவில் அமிலக் கழிவுகள் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.