2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் டீம் இந்தியா தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நவம்பர் 12ஆம் தேதி, அதாவது நாளை நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா உலக சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

உலகக் கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்களில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோஹித் 8 போட்டிகளில் 1 சதத்துடன் 442 ரன்கள் குவித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு வாய்ப்புள்ளது. அந்த உலக சாதனைக்கு 5 சிக்ஸர்கள் தூரத்தில் ரோஹித் உள்ளார். தற்போது இந்த சாதனையை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் வைத்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் கெய்ல் 49 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோஹித் 45 சிக்சர்களை அடித்துள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 43 சிக்ஸருடன் 3வது இடத்தில் உள்ளார்..

நெதர்லாந்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. ரோஹித்தின் தற்போதைய ஃபார்மில் 5 சிக்ஸர்கள் அடிப்பது அவருக்கு பெரிய விஷயமல்ல. எனவே இந்த போட்டியில் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கவும் இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு சாதனை அடிப்படையில் மிகவும் முக்கியமானது.