
உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரைச் சேர்ந்த ஃபாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபாரூக் தனது மனைவி அம்ரீனின் காதலனான மெஹர்பானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை செய்வதற்காக, அம்ரீன் தனது திருமணக் காதணிகளை விற்று மெஹர்பனுக்காக ஒரு கைத்துப்பாக்கி வாங்கியதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில் தெரியவந்ததாவது, ஃபாரூக்கும் அம்ரீனும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மெஹர்பன் அம்ரீனின் வாழ்க்கையில் நுழைந்தார். மெஹர்பன், ஃபாரூக்கின் உறவினராவார். ஃபாரூக் தன்னுடைய வேலை காரணமாக பெரும்பாலும் இரவுகளில் வீட்டில் இல்லாமல் இருப்பதையொட்டி, மெஹர்பன் மற்றும் அம்ரீன் இடையே காதல் வளர்ச்சி பெற்றது. இது ஃபாரூக்-க்கு தெரிய வந்ததும் தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால், ஃபாரூக்கை முற்றிலும் தவிர்க்கவும், காதலனுடன் வாழ்க்கையை தொடரவும், அம்ரீன் ஒரு திட்டம் தீட்டினார். மெஹர்பனுடன் திட்டமிட்டு, தனது காதணிகளை விற்று 315 எம்எம் துப்பாக்கியை வாங்கினார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, மெஹர்பன் தனது நண்பர் உமருடன் ஃபாரூக்கை ஒரு காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்று, மது அருந்திய பிறகு, இருட்டில் ஃபாரூக்கை சுட்டுக் கொலை செய்தனர்.
கொலையின் பின்னணியில் நடந்தவை அனைத்தும் தற்போது விசாரணையில் வெளியாகி, போலீசாரால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவத்தில், ஃபாரூக் மற்றும் அம்ரீனின் இரு பிள்ளைகள்— 4 வயது மகளும், 2வயது மகனும் தங்களது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் தவிக்கின்றனர். இந்த கொலை வழக்கு தற்போது பிஜ்னோரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.