
சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு அவசர நிலை அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தியாகராஜனின் 5 வயது மகன் ரோகித், வீட்டில் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக கத்தி முகத்தில் குத்திய நிலையில் இந்த மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், கத்தி முக எலும்புகளைத் துளைத்து, மூளையின் முக்கிய ரத்த நாளத்தை தொடும் வகையில் ஊன்றியிருப்பது தெரியவந்தது. உடனடியாக மூளை நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, ஈ.என்டி, மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் ஒன்றிணைந்து குழுவாக 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ரத்த நாளத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் கத்தியை வெற்றிகரமாக அகற்றி, சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
சிகிச்சையின் வெற்றிக்குப் பிறகு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேவி மீனா, மருத்துவக் குழுவினரை பாராட்டினார். மேலும், “உடலில் கூர்மையான பொருட்கள் குத்தப்பட்டால், அவற்றை தாங்களாக அகற்ற முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும்” என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
குழந்தையின் தாய் கூறுகையில், “பழத்தை அறுக்க குழந்தை கத்தி எடுத்தபோது, பாயில் சறுக்கி விழுந்ததால் முகத்தில் குத்தியது. என் மகனை உயிருடன் மீட்ட டாக்டர்களே எனக்கான கடவுள்” எனக் கண்கலங்க நன்றி தெரிவித்தார்.