தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை எனவும், அரசு பேருந்து துறை நஷ்டத்தில் செயல்படுவதை காரணம் காட்டி கிராமப்புறங்களில் இயங்கும் பேருந்துகளை நிறுத்துவது கண்டனத்திற்குரியது எனவும் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். அவர், இதுவரை எந்த அரசு பேருந்து நிறுத்தப்படவில்லை. புதிதாக 4,300 பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். திமுக அரசின் பெயர் மற்றும் புகழை எடப்பாடி பழனிச்சாமையால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இப்படி பொய் அறிக்கைகளை வெளியிடுகிறார். அரசின் மீது சேற்றை வாரி இறைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை பொய்யும் புரட்டும் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் போக்குவரத்து துறையில் காலியாக இருக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 2000 வழித்தடங்கள் முடக்கப்பட்டதோடு 5 வருட ஆட்சியில் ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை எனக் கூறினார்.