நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி ஆ. இளவரசன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 1983-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 42 ஆண்டுகாலம் கட்சியின் விசுவாசமிக்க தொண்டனாகப் பணியாற்றி வந்த அவர், தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, அதற்கான கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகவில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு இடையே, மூத்த நிர்வாகி ஒருவரின் இந்த அதிரடி முடிவு அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் கடிதத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளை இளவரசன் முன்வைத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கழகம் துடுப்பில்லாத படகைப்போல் தத்தளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் மதிப்பளிக்காமல் பணத்திற்கும், புதியவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதால் தான் அதிமுக தொடர்ந்து 11 முறை தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று சாடியுள்ளார்.

மேலும், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு, தோல்விகளுக்குப் பொறுப்பேற்கவும் பொதுச்செயலாளர் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைமுக ஆதரவோடு முதலமைச்சராவதற்கும் துணிந்துவிட்டதாகக் கடிதத்தில் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள இளவரசன், மிகுந்த மனவேதனையோடு கழகத்திலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.