
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அந்த நபர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வனத்துறையினர் தங்களை யானை தந்தம் வாங்குபவர்கள் போல் பேசியுள்ளனர்.
அவர்கள் சூளகிரி பகுதியை சேர்ந்த நரசிம்மன்(40), நந்தகுமார்(45), அந்தோணி ராஜ்(63) மற்றும் நரசிம்மன்(32) ஆகிய 4 பேரும் சேர்ந்து யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. எனவே அவர்களிடம் வனத்துறையினர் தாங்கள் யானை தந்தங்கள் வாங்க நினைக்கிறோம் என கூறி குந்தார பள்ளிக்கு வரவழைத்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று நரசிம்மன் உட்பட 4 பேரும் சேர்ந்து தங்களது மோட்டார் சைக்கிளில் குந்தாரப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் உடைந்து கிடந்த யானை தந்தங்களை எடுத்து வந்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறினர்.
எனவே நரசிம்மன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 400 கிராம் எடையுள்ள இரண்டு யானை தந்தங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.