திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் 11 வயது மற்றும் 4 வயதான 2 மகன்கள் விடுமுறை நாளில் விளையாடுவதற்காக தொழிலாளியின் வீட்டிற்கு வருவார்கள். நேற்று முன்தினம் உறவினரின் இரண்டு மகன்களும் கூலி தொழிலாளியின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கூலி தொழிலாளியின் மனைவி குழந்தைகளுக்கு பால் காய்ச்சி கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் நான்கு குழந்தைகளும் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது குழந்தைகள் குறித்த பாலில் சீனிக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்தது தெரியவந்தது. கூலி தொழிலாளி மூட்டு வலி நிவாரணையாக மெக்னீசியம் சல்பேட்டை வைத்திருந்தார். அது சீனி போன்ற இருப்பதால் கவனிக்காமல் கூலி தொழிலாளியின் மனைவி பாலில் கரைத்து குழந்தைகளுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.