பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபரான சுச்சனா தனது நான்கு வயது மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து காலி செய்த சுச்சனா பெங்களூருக்கு செல்ல டாக்ஸி ஒன்று தயார் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

விடுதி ஊழியர்களும் விமான மூலமாக செல்லலாமே என்று அறிவுறுத்திய நிலையில் தனக்கு டாக்ஸி போதும் என உறுதியாக கூறியுள்ளார். இதையடு்த்து அப்பகுதியை சேர்ந்த டாக்ஸி ஒன்றை தயார் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் சுச்சனா தங்கி இருந்த அறையை விடுதி ஊழியர் சுத்தம் செய்ய சென்றபோது அங்கு ரத்தக்கரை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்தவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சுச்சனாவுடன் அவரது மகன் இல்லாதது கண்டு யோசித்துள்ளனர். டாக்ஸி ஓட்டுனரை தொடர்பு கொண்ட போலீசார் சுச்சனாவிடம் அவரது மகன் குறித்து கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஓட்டுனரும் அதன்படி கேட்க அதற்கு சுச்சனா தனது மகனை தோழியின் வீட்டில் விட்டுள்ளதாக கூறி ஒரு முகவரியை கூறியுள்ளார். காவல்துறையினர் அந்த முகவரிக்கு சென்று பார்த்த போது அது போலியான முகவரி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டாக்ஸி ஓட்டுனரிடம் சுச்சனாவிடம் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு குறிப்பிட்ட ஒரு காவல் நிலையத்திற்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி டாக்ஸி காவல் நிலையத்திற்கு செல்ல அங்கு காத்திருந்த போலீசார் சோதனை மேற்கொண்ட போது சுச்சனாவின் பேக்கில் சிறுவனின் சடலம் இருந்துள்ளது. இதனை அடுத்து சுச்சனாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.