மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்கள் இன்று (08.12.2023) பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப்  பொருட்கள் வினியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுவிநியோகத் திட்ட அங்காடிகள் அனைத்தும் செயல்படுகின்றன. இந்த மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் 11 தவிர அனைத்து விற்பனை நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 11 விற்பனை நிலையங்களும் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வீணான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், அதற்கு பதிலாக புதிய பொருட்களை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து கிடங்குகளிலும் நியாய விலை கடைகளிலும் அனைத்து பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திடவும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அத்தியாவசிய பொருள்களை தடையின்றி தரமாக வழங்குதலை உறுதிப்படுத்திடவும்,

தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு நேர்வாக காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் திரு. ஹர்சஹாய் மீனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் திரு. அண்ணாதுரை, மற்றும் உயர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.