ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்து தொடரை விட்டு அவமானத்துடன் வெளியேறியுள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் முதன்முதலில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடமும் வரிசையாகத் தோற்று நிர்மூலமானது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் வஹாப் ரியாஸுக்கும், கேப்டன் ஃபாத்திமா சனாவுக்கும் இடையே மைதானத்திலேயே கலகலப்பான சூழல் மாறி பெரும் சண்டை வெடித்துள்ளது. கோச் வஹாப் ரியாஸ் கேப்டன் ஃபாத்திமா மீது பயங்கரமாகக் கத்த, கேப்டனோ அவரைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லாமல் கோபமாக நின்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Wahab Riaz shouting at Fatima Sana after they lost against Australia Women’s by 113 runs 🤨
BTW, Fatima is the only one performing for Pakistan in their T20 World Cup and the rest are having a flop show 🤪
What are your thoughts 🤔pic.twitter.com/K6GgU3Skcm
— Ajay Jadeja (@AjayJadeja171) June 25, 2026
இந்த மோதலுக்குப் பின்னால், பாகிஸ்தான் அணியில் நிலவி வந்த அடுக்கடுக்கான ஒழுக்கக் குறைபாடுகளும், அணித் தேர்வில் நடந்த குளறுபடிகளுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சொதப்பலாக விளையாடி வரும் வீராங்கனை ஆலியா ரியாஸை அணியில் இருந்து நீக்க கேப்டன் ஃபாத்திமா சனா விரும்பியுள்ளார். ஆனால், கோச் வஹாப் ரியாஸ் அவரை வற்புறுத்தி அணியில் சேர்த்துள்ளார். மேலும், ஆலியா ரியாஸ் தனது கணவர் அலி யூனுஸை அணியினர் தங்கும் ஹோட்டல் அறைக்கே அழைத்து வந்து தங்க வைத்ததற்கு கேப்டன் கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிறகே, அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, போட்டிக்கு முந்தைய நாள் பிராக்டிஸ்க்கு வராமல் ஆலியா ரியாஸ் தன் கணவருடன் ஊர் சுற்றச் சென்றதும் அணியில் பெரும் சண்டையை உருவாக்கியுள்ளது. இந்த உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய ஒரு வீராங்கனைக்கு வழங்கப்பட்ட ‘ஸ்பெஷல்’ சலுகைகளும், அணியில் ஒழுக்கம் இல்லாததுமே பாகிஸ்தான் அணியின் இந்தத் தோல்விக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
