ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரலியா கிராமத்தில் கலுலால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் வராததால் அந்த கிணறை அப்படியே மூடாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் கலுலாலின் 5 வயது மகன் பிரகலாத் நேற்று விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான்.

இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் 32 அடி ஆழம் இருந்த அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவனை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 மணி நேரமாக மீட்பு பணிகள் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் சிறுவனை மீட்டனர். ஆனால் சிறுவனை  பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.