உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் பங்கேற்பார்கள். இதனை அடுத்து பிரயாக்ராஜ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு நதியில் நீராட பல லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 25 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த 60 பேரில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகா கும்ப மேளாவில் பொதுமக்கள் உயிரிழந்ததற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் இந்த பொதுநல வழக்கை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் கூறப்பட்டதாவது, மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக திறன் இன்மை, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

வி.ஐ.பி களின் வருகையால் சாதாரண பொது மக்களின் பாதுகாப்பை சமரசம் செய்ய கூடாது எனவும், வழிகாட்டு பலகைகளில் அனைத்து மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்று இருந்தால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அனைவருடனும் உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மகா கும்பமேளாவிற்கு வரும் VVIP பிரபலங்களுக்கு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை சிறப்பு பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஒருவழிச்சாலையில் எந்த ஒரு வாகனத்துக்கும் சிறப்பான அனுமதி கிடையாது. அயோத்தி, வாரணாசி, லக்னோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து புனித நீராட வரும் பக்தர்களுக்கு சாலைகளில் எந்த இடையூறும் இன்றி வாகனங்கள் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் 30 பேர் உயிரிழந்த நிலையில் உத்தரபிரதேச அரசு இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.